Skip to main content

SMART BOY SALEEM

 


                            SMART BOY SALEEM

                                                நான் தற்போது உங்களிடம் பதியும் பதிவு, நான் முதல்வராக இருந்த தருவாயில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு.

                    சலீம் ஒரு LKG மாணவன். அவர்கள் வீட்டின் ஒரே செல்லப் பிள்ளை அவனது தந்தை துபாயில் பணிபுரிகிறார். சலீமை LKG சேர்பதற்கு மேள தாளம் மட்டும் இல்லை. அவர்கள் மொத்த குடும்பமும் , அவர்கள் ஏரியா மசூதி தலைவருடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

                   ஒரு பெரிய தாம்பாளத்தில் பழ வகைகளோடு என் அறைக்குள் வந்தனர். அவர்கள் குடும்பத்தில் அவ்வளவாக படித்தவர்கள் இல்லை போலும், அதனால் தான் சலீமுக்கு இந்த ஆர்ப்பாட்டம். சரி சேரப் போகும் மாணவன் எங்கே என்று கேட்டேன்,”மேடம் அவன் உள்ள வராம அவுங்க அம்மாவோடு கேட் அருகே அழுதுட்டு நிக்கறான்”, என்றார் அப்பையனின் தந்தை.

                   எங்கள் பள்ளியில் LKG அட்மிஷன் போடும் மாணவர்களுக்கு ஒரு பரிசுப் பொருள் கொடுப்பது வழக்கம். அதனால் அந்த வருடம் வழங்க உள்ள ஜீப்பை எடுத்துக் கொண்டு நானே கேட் அருகே சென்றேன். அங்கு பெரும் சத்தத்தில் சலீம் அழுதுக் கொண்டிருந்தான். என்னை கண்டதும் அழுகை அதிகமானது.

                   சற்று நேரம் பொறுமையாக பேசி, அந்த ஜீப்பை காட்டினேன். அவனிடம் அழுகை குறைந்தது, தேம்பிக் கொண்டே வாங்க முற்பட்டான். “பள்ளிக்கு வா தருகிறேன்,” என்றேன். வேறு வழியில்லாமல் அரை மனதுடன் என் கையை பிடித்துக்கொண்டு வந்தான். அவன் பள்ளிக்கு உள்ளே வந்து வகுப்பிற்கு செல்லும் வரை அவன் தந்தை அவரது கைப்பேசியில் வீடியோ பதிவு  செய்தார்.

                   வகுப்பிற்கு நுழைந்த சலீம் அங்கு அழும் குழந்தைகளை பார்த்து மேலும் அழத் துவங்கினான். வேறு வழியின்றி அவனை அவனது வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்து விட்டு என் அறை  வந்தேன். முதல் நாள் என்பதால், ஒரு இரண்டு மணி நேரம் கழித்து கூட்டிசெல்லுங்கள், அதுவரை கிரௌண்டில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில்  அமருங்கள், என்று கூறி விட்டு ரௌண்ட்ஸ் சென்றேன்.

                  சிறிது நேரம் கழித்து பெற்றோர்கள் வசதியாக அமர்ந்து  இருக்கிறார்களா என்று காண, நான் கிரௌண்ட்க்கு சென்றேன் அங்கே மற்ற பெற்றோர்கள் நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் சலீம் குடும்பத்தை காணவில்லை. அங்கு DUTYஇல் இருந்த NANNY யிடம் எங்கே சலீம் குடும்பம் என்றேன், “மேடம் அங்கே பாருங்க”, என்று ஒரு பெரிய மரத்தடியை காட்டினார், அங்கே ஒரு பெரிய விரிப்பை விரித்து அனைவரும் சுற்றி அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பெரிய கேரியரில் வித விதமான உணவுகள், ஏதோ டூர் வந்தது போல் தெரிந்தது. நான் சிரித்துக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தேன். அப்போது என் பின்னே சலீமின் தந்தை வந்து,”மேடம், என் மகன் வகுப்பில் அவனது நண்பர்களுடன் இருப்பது போல் படம் பிடிக்க வேண்டும் என்றார்.

            அவருடைய ஆசை எனக்கு புரிந்தது. ஆனால் அவன் கண்ணில் படும்படி வாய்ப்பில்லை, மறைந்து எடுங்கள் என்று கூறி ஜன்னல் வழியாக எடுக்க அனுமதித்தேன். சந்தோஷமாக ஒப்புக் கொண்டார்.

            மறுநாள் சலீம் வரவில்லை. அதற்கு அடுத்த நாள், அவனது பெற்றோருடன்  அழுகையுடன் வந்தான் . “ஏன் சார் நேற்று என்னவாயிற்று என்றேன்”, “மன்னித்துவிடுங்கள் மேடம் , இன்று நான் துபாய் செல்கிறேன், அதனால் சலீமை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டேன். இனிமேல் விடுப்பு எடுக்கு  மாட்டான்,” என்றார். மிகுந்த சிரமத்துடன் அவனை விட்டுச்சென்றனர்.

            தினமும் அழுகை ,அவனது தாயை முகமெல்லாம் கிழித்து, கைகளை கடித்து மண்ணில் புரண்டு வருவதை வழக்கமாக்கி கொண்டான் சலீம். ஒரு முறை அவனது தாய், “மேடம், எங்கள் குடும்பத்துக்கு படிப்பு என்றாலே ஆகாது, அதனால் தான் என்னமோ, இவன் இப்படி பண்றான்”, என்று கூறி அவனது தந்தையிடம் பேசுமாறு கூறி, துபாயில் இருக்கும் அவனது தந்தையை அழைத்தார். அவர் பேசுகையில்,”மேடம் ஏதாவது செய்து அவனை பள்ளி வர வையுங்கள், நீங்க நல்லா இருப்பீங்க, நான் இரண்டு வருடம் கழித்து தான் வருவேன் மேடம், என் பையனை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் எனக்கு தெரியாது,” என்றார்.

           தினமும் அழும் சலீம் , “என்னிடம் வந்து நான் வகுப்பிற்கு செல்லமாட்டேன் , ஆனால் NANNY யோடு வகுப்பிற்கு வெளியே அமர்ந்துக் கொள்கிறேன்”, என்றான். சரி முதலில், பள்ளி வரட்டும் என்று எண்ணி ஒப்புக் கொண்டேன். ஒரு நாள் NANNY வேறு வேலையில் ஈடுப்பட்டிருந்த போது, சலீம் யாரும் அறியா வண்ணம் , அவன் வரும் பள்ளி வாகனத்தில் சென்று ஏறி கடைசி சீட்டில் அமர்ந்தவன் , தூங்கியும் போனான்.

          சற்று நேரம் வேலை முடித்து வந்த NANNY , சலீம் காணாது பயந்து அவனது வகுப்பாசிரியரிடம் கேட்க, அவனை அனைவரும் தேட துவங்கினர். விஷயம் என்னிடம் வந்தது, பள்ளி முழுவதும் தேடினோம், எதற்கும் பள்ளி வாகனத்தில் பார்ப்போம் என்று எண்ணி கிளீனர் சென்று பார்க்க , அந்த வாகனத்தில் நல்ல உறக்கத்தில் சலீம் இருந்தான்.

          சில நாட்கள் வகுப்பு செல்லாமல்,”மேம் நான் உங்க அறையிலேயே இருக்கேன் வகுப்புக்கு போகமாட்டேன் “, என்றான். சரி என்று என் அருகே உள்ள சோபா வில் அமர்ந்து இருப்பான், நான் ரௌண்ட்ஸ் செல்கையில் என் கையைப் பிடித்துக்கொண்டு வருவான். நானும் மற்ற வகுப்பில் பயிலும் மாணவர்களை காட்டி இவ்வாறு முழு சீருடையில் வர வேண்டும் நன்கு படிக்க வேண்டும் என்பேன்.

          சில சமயம் காலை சிற்றுண்டி இட்லியை நான் தான் ஊட்டி விட வேண்டும் என்பான், நானும் ஊட்டி விட்டதுண்டு.சந்தோஷமாக சாப்பிடுவான். பின்பு அவனை மெல்ல அவனது வகுப்பிற்கு கூட்டி சென்று நானும் அமர்ந்துக் கொள்வேன். சில மாதங்கள் கழித்து ,” மேம் குட் மார்னிங்,” என்று கூறி வகுப்பு செல்ல துவங்கினான். “என்ன சலீம்  என்ன லஞ்ச்”, என்று கேட்பேன் “ பிரியாணி, கறி ஆணம்,” என்பான்.

        சலீமுக்கு ஏதுவாக COVID லாக் டவுன் வந்தது. அவ்வப்போது ஆன்லைன் வகுப்பில் பார்த்ததுண்டு. பின்பு அவன் இரண்டாம் வகுப்பிற்கு பள்ளி வந்தான். இரண்டு வருடம் வீட்டில் இருந்து ஆளே மாறியிருந்தான். ஆள் முழு சீருடையில்   பள்ளி வாகனத்தில் வந்தான். இறங்கியதும்,”மேம், நான் இப்ப 2nd std பெரிய பையனா ஆயிட்டேன்,” என்றான்.ஆச்சரியமாக இருந்தது, வாகனம் விட்டு இறங்கும் போது cleaner பையனை கடித்து, பிராண்டி, மண்ணில் புரண்ட சலீமா இவன் என்று வியந்தேன்.

        ஆனால் இம்முறை அவன் என்னுடன், என் அறைக்கு வரவில்லை, என் விரல் பிடித்து ரௌண்ட்ஸ் வரவில்லை, இட்லி ஊட்ட சொல்லவில்லை, “என் கிளாஸ் எது மேம் “, என்று கேட்டப்படி மாடி சென்றான். என் மனம் ஏனோ வலித்தது.

        ஆனால் ஒவ்வொரு வருடமும் எனக்கும் சலீம், மாளவிகா போன்ற நண்பர்கள் வந்துக்கொண்டே தான் இருந்தார்கள்.         

Comments

Popular posts from this blog

அன்புள்ள அப்பாவுக்கு,

  அன்புள்ள அப்பாவுக்கு,               உங்க ஆச மவ பாக்கியம் எழுதுறேன். நா இங்க சுகமா இல்லப்பா. நம்ம ஒத்த புள்ளைய நல்ல இடத்துல கட்டிக்கொடுத்துட்டோம்னு சந்தோஷத்துல இருப்பீங்கன்னு தெரியும். ஆனா நா இதுவரைக்கும் உங்ககிட்டையும், அம்மாட்டயும் சொல்லாத விஷயத்த இப்போ சொல்றேன்.                           எம்மவ பாக்கியம்   கிடைக்க நா பாக்கியம்   பண்ணியிருக்கேன்னு, ஒரு நாளைக்கு நூறு தடவையாச்சம் சொல்வீங்க. இங்க புகுந்த வீட்டுல உங்க பாக்கியம்   பாடாப்படுது.                   நாலு ஆம்பளை புள்ளைங்களுக்கு பிறகு, பிறந்த என்ன, பாராட்டி சீராட்டி வளத்து, படிக்கப் போனா பயலுவ பாப்பாங்க, வயலுக்கு போனா வாடிடுவேன்னு , பொத்தி வைச்சு வளத்து, என்னத்த கண்டீங்க, போங்க முடிஞ்சத சொல்லி என்ன லாபம்.                            தரகர் கொண்டு வந்த வரன்ல, இவன் குடிகாரன், இவுங்க கூட்டு குடும்பம், இவுங்கள பத்தி அப்படி சொல்லிக்கிற மாதிரி இல்ல, இது சரியாவராது, அந்த பையன் சரிஇல்ல, இவன் மாறு கண்ணு, இவன் வழுக்க, இவனுக்கு வயசு அதிகம்யா, என்று வந்த வரன்னை எல்லாம் ஒதுக்கியப்போ நினைச்சேன், அப்பா நம்பள நல்ல இடத்துல தான் கட்டி கொடுக

தொடர்வண்டி பயணம்

       தொடர்வண்டி பயணம் தொடர்வண்டி , ஒரு அருமையான பயண ஊர்தி. களைப்பில்லாமல் களிப்போடு பயணிக்கலாம். அதுவும் ஜன்னலோரப் பயணம்- ஆஹா அற்புதம். முன்பதிவு செய்ததால், சற்றும் பதட்டமில்லாமல், எனக்கான ஜன்னலோரம் இருக்கையில் அமர்ந்தேன், அதுவே பெரிய சாதித்த உணர்வை தந்தது. ரயில் நிலைய சலசலப்பு சற்று எரிச்சலடைய வைத்தது. அறிவிப்புகள் வந்த வண்ணம்   இருந்தது. நான் ஏறியதால் , அந்த அறிவிப்பும் அவசியமற்றதாக தோன்றியது. இந்த ரயில் தான் இந்த நிலையத்திற்கே கடைசி போல சிறு வியாபாரிகள் அவசர அவசரமாக தங்கள் பொருட்களை விற்பதில் தீவிரம் காட்ட, தேவையான தின்பண்டங்கள், உணவு, மற்றும் நீர் இருப்பதை என் பையைத் தொட்டு உறுதி படுத்திக் கொண்டு, ரயில் நகர்ந்து வேகமெடுக்க ஆவலாக இருந்தேன். வீட்டிலும், வரும் வழியிலும், ரயிலுக்கு காத்திருப்பிலும் சொல்ல நேரமில்லாத விஷயங்களை, அவசர அவசரமாக ஜன்னலோரமாக நின்றுக் கொண்டு, பயணம் செய்யப்போகும் , தன் மனைவியிடம் அவளது கணவன்   அளவளாவிக்   கொண்டிருந்தார். எனக்கு சிரிப்பு வந்தது, வீட்டில் இருக்கும் போது முகம் கொடுத்து கூட பேச மாட்டார்கள், இப்போது பார்க்கும் போது ஆத்மார்த்த தம்பதி போல் பா வன