Skip to main content

அன்புள்ள அப்பாவுக்கு,

 


அன்புள்ள அப்பாவுக்கு,

              உங்க ஆச மவ பாக்கியம் எழுதுறேன். நா இங்க சுகமா இல்லப்பா. நம்ம ஒத்த புள்ளைய நல்ல இடத்துல கட்டிக்கொடுத்துட்டோம்னு சந்தோஷத்துல இருப்பீங்கன்னு தெரியும். ஆனா நா இதுவரைக்கும் உங்ககிட்டையும், அம்மாட்டயும் சொல்லாத விஷயத்த இப்போ சொல்றேன்.

                         எம்மவ பாக்கியம்  கிடைக்க நா பாக்கியம்  பண்ணியிருக்கேன்னு, ஒரு நாளைக்கு நூறு தடவையாச்சம் சொல்வீங்க. இங்க புகுந்த வீட்டுல உங்க பாக்கியம்  பாடாப்படுது. 

               நாலு ஆம்பளை புள்ளைங்களுக்கு பிறகு, பிறந்த என்ன, பாராட்டி சீராட்டி வளத்து, படிக்கப் போனா பயலுவ பாப்பாங்க, வயலுக்கு போனா வாடிடுவேன்னு , பொத்தி வைச்சு வளத்து, என்னத்த கண்டீங்க, போங்க முடிஞ்சத சொல்லி என்ன லாபம்.

                         தரகர் கொண்டு வந்த வரன்ல, இவன் குடிகாரன், இவுங்க கூட்டு குடும்பம், இவுங்கள பத்தி அப்படி சொல்லிக்கிற மாதிரி இல்ல, இது சரியாவராது, அந்த பையன் சரிஇல்ல, இவன் மாறு கண்ணு, இவன் வழுக்க, இவனுக்கு வயசு அதிகம்யா, என்று வந்த வரன்னை எல்லாம் ஒதுக்கியப்போ நினைச்சேன், அப்பா நம்பள நல்ல இடத்துல தான் கட்டி கொடுக்கப்போராகன்னு.

                        கடைசியில நல்ல கழனி பானையில கைய விட்ட மாதிரி, எனக்கு ஒரு வரனப்  பார்த்து கட்டி வைச்சீங்க. ஒத்த புள்ள, சொந்த வீடு, நிலா புலம் எல்லாம் இருக்குன்னு. இங்கு வந்தப் பிறகு தான் தெரிஞ்சிது, ஒத்தப் புள்ள தான் ஆனா ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. சொந்த வீடு இருக்கு ஆனா  நா சொகமா இல்ல.நில புலம் இருக்கு ஆனா புண்ணியமில்லன்னு.

                        இங்க நின்னா  குத்தம், நடந்தா குத்தம். தென்னை மரத்துல தேங்காய் காய்கிலேன்னா நா வந்தனால தான், கொடியில அவரைக்காய் காய்கிலேனா என்னால தான், தக்காளி காய்க்கிலேனா இந்த தரித்திரம் புடிச்சவநாலா தான், பச்சைமிளகாய் காய்க்கலேனா இந்த பாவி சிறுக்கி வந்தனால தான்.

                       கல்யாண சீர்ல வாங்கிக் கொடுத்த குக்கர் விசில் அடிக்கலேனா, அன்னைக்கு என் சோலி முடிஞ்சது. எங்க ஊர்ல நாங்க பெரிய தலைக்கட்டு, நிறைய பேருக்கு பலகாரம் கொடுக்கணும்னு அண்டாவுல பலகாரம் கேட்டாங்கல, உண்மையில இந்த ஊர் ஜனங்க இந்த வீட்டுல உள்ள யார் கிட்டேயும் பேச மாட்டாங்க, அந்த அண்டா பலகாரம் எல்லாம், வயல்ல வேலை செய்றவங்களுக்கு நாலு நாள் கழிச்சு கொடுத்தாங்க.

                       வீட்டு வாசல்ல புள்ளி வைச்சு தான் கோலம் போடனும்மா, ரங்கோலி மாதிரி நல்ல அழகா பட்டையா நா போடற ஸ்டார் கோலம் கூட உங்களுக்கு பிடிக்குமே, அத ஒரு நாள் போட்டேன். போடற வரைக்கும் பார்த்துட்டு போட்டு முடிச்சதும், ஒரு வாளி தண்ணீர கொண்டு வந்து கோலத்து மேல ஊத்திட்டு, திரும்ப புள்ளி வைச்சு போடசொன்னங்க.

                  மாசமா இருக்கிறதால சட்ன்னு குனிஞ்சி நிமிர முடியல.என்ன செய்ய மயக்கமா வருது. எல்லா வேலையும் முடிச்சிட்டு என் அறைல போய்  படுத்தா,” என்ன பகல்ல தூக்கம்ன்னு கதவ படபடன்னு தட்டி கேக்குறாங்க.

                  உலை வைக்கும் போது சாதத்தை அளவா வைன்னு சொல்லிட்டு, தினமும் அவுங்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு போனதும் போய் பார்த்தா , எனக்கு சோறு இருக்க மாட்டேங்குது. இது வயித்துல இருக்கிற புள்ளைக்கு தெரியுமா, அது கிடந்தது பசில புரளுது .

                  புள்ளையார் சதுர்த்திக்கு வாழை  இலை கொழுக்கட்டை செஞ்சோம். சாமிக்கு படைக்க நேரமானதால , அதையே ராத்திரி சாப்பாடா போச்சு. எனக்கு மூணு, உங்க மாப்பிள்ளைக்கு மூணு கொழுக்கட்டை கொடுத்தாங்க. ராத்திரி இவர் வர நே ரமானதுல, அவர் கொழுக்கட்டையை நானே சாப்பிட்டு தண்ணிய குடிச்சிட்டு படுத்திட்டேன்.

                  காலையில என் மாமியார், எங்க அவன் கொழுக்கட்டையை கொண்டு வான்னு கேட்டாங்க, நா சாபிட்டுட்டேன்னு சொன்னேன். அதுக்கு, “அடிப்பாவி அத்தனையுமா தின்னு தீர்த்துட்டன்னு சொன்னாங்க”. போன வாரம் வயலுல அறுப்பு, காலையிலேயே மாமாவும், உங்க மாப்பிள்ளையும் வயலுக்கு போய்ட்டாங்க. நேரத்துக்கு மதிய சாப்பாடு அனுப்பனும்னு நா சமைச்சு, ரெண்டு பேருக்கும், தனித்தனியே டிபன் காரிர்ல வைச்சு, கொண்டு போலாம்னு ,கிளம்பறப்ப , என் மாமியார் நா போய் கொடுக்கிறேன்னு சொல்லி எடுத்துட்டு போனாங்க.

                  சரி கொஞ்ச நேரம் இடுப்ப சாய்க்க்கலாம்னு படுத்தேன். கதவ யாரோ பட படன்னு தட்டினாங்க, பார்த்தா உங்க மாப்பிள்ளை. உள்ள வந்ததும் ,”ஏண்டி காலைல நானும் அப்பாவும் சேர்ந்து தான வயலுக்கு போனோம், அப்ப ரெண்டு சாப்பாடு கொடுக்கணும்னு தெரியாதா”, அப்படீன்னு சொல்லி கன்னத்துல பளார் ன்னு அறைஞ்சிட்டார். இல்ல நா ரெண்டு டிபன் வைச்சேன்னு சொல்லி ,வீடு முழுக்க தேடினேன். இவருக்கு கட்டிய டிபன் வாசல்ல ஒரு நாற்காலி அடில இருந்துச்சு.நா அடி வாங்கறது இருக்கட்டும். அவுங்க புள்ள சாப்பிடாம இருக்குமேன்னு அவுங்களுக்கு ஏன் தோணல.

                 அன்னைக்கு ஒரு நாள், நா குளிச்சிட்டு புடவையை காயப் போட்டு திரும்பினேன், அந்த புடவைல சௌந்தரராஜன் & கோ அப்படீன்னு பிரிண்ட் ஆகியிருந்தது. அதப் பார்த்த என் மாமியார், உங்க மாப்பிள்ளை கிட்ட ,”ஏன்டா இந்த புடவையை நீ எடுத்து கொடுக்கலையா, வேற பேர் போட்டிருக்கு,”ன்னு சொல்லி சிரிக்கிறாங்க.

                 ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனை, சண்டை, அழுதா, “ என்னடி, என் புள்ளைட்ட இருந்து என்ன பிரிக்க பாக்குறியா,” ன்னு சண்டை போடறாங்க. அதனால நா குளிக்கும் போதே அழுதுருவேன், அப்ப தான தெரியாது.

                 அப்புறம் தினமும், காலைல கோலம் போட வரும்போது, அப்படியே குறுக்கால ஓடி வந்து பஸ் ஏறிடலாம்னு நினைப்பேன், ஆன அங்க வந்து என்ன செய்ய உங்கள கஷ்டப்படுத்த மனசு வரல.

                 சரி இவர் கூட எங்காவது போவோன்னு, ஒரு நாள் கேட்டேன், அவரும் யோசிச்சிக்கிட்டே, சரி வா வெளியில ஒரு வேலை இருக்குன்னு கிளம்பசொன்னாரு , ஆசை ஆசையா கிளம்பினேன், வாசல்ல உட்கார்ந்த மாமனார், மாமியார் கிட்ட  சொல்லும் போது, நீ எதுக்கு போற, அவன் போகட்டும் நீ உள்ள போய் வேலையிருந்தாப் பாருன்னு சொல்லிட்டாக.

                  நீங்க எனக்கு சீரா கொடுத்த மிக்சி இருக்கு, ஆனா தேங்காய் சட்னி அம்மில அரைச்சா தான் ருசின்னு, அம்மியில அரைக்க சொல்றாங்க, என் உடம்பு ஒத்துழைக்க மறுக்குது. போன வாரம் கிரைண்டர்ல மாவு போட்டு முடிச்சி கல்ல தூக்குனேன், வயிறு பிடிச்சு இழுத்து, உதிரம் வர ஆரமிச்சிட்டு.  டாக்டர் ட்ட போகும்போது, “நீ அங்க போய் கல்ல தூங்குனேன்னு சொல்லாத”, அப்படீங்கிறாங்க.

                  இன்னும் லேசா வலிச்சிட்டு தான் இருக்கு.எங்க ராத்திரி உங்க மாப்பிள்ளையிட்ட சொல்லிடுவேண்டு. ஏய், தம்பி, அது( நா தான்) ரொம்ப வீக்கா இருக்கு,தனியா படுக்கட்டும், நீ அத(நா தான்) அந்த ரூம்ல படுக்க சொல்லுன்னு சொன்னாங்க. சரி நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்கன்னு நினைச்சேன்.

                   காலையில மாமாவும், இவங்களும் வேலைக்கு போனதும். “எப்படி உங்க ரெண்டு போரையும் தனியே படுக்க வைச்சனா”,  என்று சொன்னங்க.இதையும் மீறி அவன்கிட்ட சொன்னேன்னா, உன் தலையில இருக்குற அந்த நாலு முடிய மழிச்சி உன் வீட்டுக்கு அனுப்புவேன்னு சொல்றாங்க.

                   ஏன்டா விடியுதுன்னு இருக்கு. இனி இங்க வாழறதுல, அர்த்தம் இல்ல.அதனால தினம் தினம் சாவறதுக்கு ,ஒரேடியா செத்துறலாம்ன்னு தீர்மானிச்சு, வயலுக்கு வைச்சிருக்கிற பூச்சு மருந்தை இப்பதான் குடிச்சேன்.

                   என்ன வயித்தில இருக்கிற புள்ளைய நினச்சா பாவமாதான் இருக்கு. ஆனா, அவனோ, அவளோ இந்த குடும்பத்தில வந்து வாழக் கூடாது. நான் பட்ட கஷ்டம் என் புள்ளைக்கு தெரியும். தினமும் நா என் புள்ளைகிட்ட சொல்லித்தான் அழுவுறேன். அதனால உங்க பாக்கியம், பாதியிலே வாழ்க்கைய முடிச்சிட்ட.

                  தயவு செய்து, பெண்களை  பெத்த எல்லா அப்பாக்களுக்கும் சொல்றேன் உங்க பொண்ண படிக்க வைங்க, தன்னம்பிகையோடும், தைரியத்தோடும் வளத்துங்க. சொந்த கால்ல நிக்குற தைரியத்த கொடுங்க. இல்லேன்னா, என்ன போல பாக்கியமில்லாத பாக்கியங்கள் பாதியிலேயே வாழ்க்கையை முடிச்சிக்குவாங்க.

                  நா போயிட்டேன்னு வருத்தப்படாம, புள்ள வெளியூர்ல படிக்குதுன்னு நினைச்சிகோங்க அப்பா, என்ன மன்னிச்சிடுங்க.

                                          இப்படிக்கு உங்க பாக்கியமில்லாத,

                                           (அ) பாக்கியம்.        

Comments

Popular posts from this blog

தொடர்வண்டி பயணம்

       தொடர்வண்டி பயணம் தொடர்வண்டி , ஒரு அருமையான பயண ஊர்தி. களைப்பில்லாமல் களிப்போடு பயணிக்கலாம். அதுவும் ஜன்னலோரப் பயணம்- ஆஹா அற்புதம். முன்பதிவு செய்ததால், சற்றும் பதட்டமில்லாமல், எனக்கான ஜன்னலோரம் இருக்கையில் அமர்ந்தேன், அதுவே பெரிய சாதித்த உணர்வை தந்தது. ரயில் நிலைய சலசலப்பு சற்று எரிச்சலடைய வைத்தது. அறிவிப்புகள் வந்த வண்ணம்   இருந்தது. நான் ஏறியதால் , அந்த அறிவிப்பும் அவசியமற்றதாக தோன்றியது. இந்த ரயில் தான் இந்த நிலையத்திற்கே கடைசி போல சிறு வியாபாரிகள் அவசர அவசரமாக தங்கள் பொருட்களை விற்பதில் தீவிரம் காட்ட, தேவையான தின்பண்டங்கள், உணவு, மற்றும் நீர் இருப்பதை என் பையைத் தொட்டு உறுதி படுத்திக் கொண்டு, ரயில் நகர்ந்து வேகமெடுக்க ஆவலாக இருந்தேன். வீட்டிலும், வரும் வழியிலும், ரயிலுக்கு காத்திருப்பிலும் சொல்ல நேரமில்லாத விஷயங்களை, அவசர அவசரமாக ஜன்னலோரமாக நின்றுக் கொண்டு, பயணம் செய்யப்போகும் , தன் மனைவியிடம் அவளது கணவன்   அளவளாவிக்   கொண்டிருந்தார். எனக்கு சிரிப்பு வந்தது, வீட்டில் இருக்கும் போது முகம் கொடுத்து கூட பேச மாட்டார்கள், இப்போது பார்க்கும் போது ஆத்மார்த்த தம்பதி போல் பா வன

SMART BOY SALEEM

                               SMART BOY SALEEM                                                 நான் தற்போது உங்களிடம் பதியும் பதிவு, நான் முதல்வராக இருந்த தருவாயில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு.                     சலீம் ஒரு LKG மாணவன். அவர்கள் வீட்டின் ஒரே செல்லப் பிள்ளை அவனது தந்தை துபாயில் பணிபுரிகிறார். சலீமை LKG சேர்பதற்கு மேள தாளம் மட்டும் இல்லை. அவர்கள் மொத்த குடும்பமும் , அவர்கள் ஏரியா மசூதி தலைவருடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.                    ஒரு பெரிய தாம்பாளத்தில் பழ வகைகளோடு என் அறைக்குள் வந்தனர். அவர்கள் குடும்பத்தில் அவ்வளவாக படித்தவர்கள் இல்லை போலும், அதனால் தான் சலீமுக்கு இந்த ஆர்ப்பாட்டம். சரி சேரப் போகும் மாணவன் எங்கே என்று கேட்டேன்,”மேடம் அவன் உள்ள வராம அவுங்க அம்மாவோடு கேட் அருகே அழுதுட்டு நிக்கறான்”, என்றார் அப்பையனின் தந்தை.                    எங்கள் பள்ளியில் LKG அட்மிஷன் போடும் மாணவர்களுக்கு ஒரு பரிசுப் பொருள் கொடுப்பது வழக்கம். அதனால் அந்த வருடம் வழங்க உள்ள ஜீப்பை எடுத்துக் கொண்டு நானே கேட் அருகே சென்றேன். அங்கு பெரும் சத்தத்தில் சலீம் அழுதுக் கொண்டி