Skip to main content

புண்ணிய ஆத்மா

 

                புண்ணிய ஆத்மா


              கால்கள் நழுவி ஒரு பெரிய பள்ளத்துக்குள் விழுந்த உணர்வு வர, கால்கள் தன்னை மறந்து ஆடியதோடு அல்லாமல் உடம்பும் குப்பென்று வேர்த்தது. கண் முழித்த கோவிந்தராஜன் , தான் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதை உணர்ந்து சட்டென்று கண்களை திறந்தார். நல்ல வேலை அது கனவு.

              நெற்றியில் ஏற்றி விட்ட கண்ணாடியை எடுத்து பொறுமையாக மடித்து, அதன் உறையில் வைத்தார். தன நெஞ்சினில் கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தை எடுத்து மூடி, அருகில் வைத்து, நல்ல வாட்டமாக சாய்ந்தார். ஒரு 60 வயது மதிக்க தக்க உருவம், மாநிறம், சற்று பூசிய தேகம், தலையில் நரையை விட வழுக்கை அதிக இடத்தை பிடித்திருந்தது. பளிச்சென்று துவைத்த கை வைத்த பனியன், வெள்ளை வேஷ்டி, எப்போதும்  நெற்றியில் விபூதி கீற்று, அதன் நடுவே ஒரு சிறிய குங்குமப் பொட்டு.

             அந்த குங்குமப் பொட்டும் அவரது மனைவிக்காக.” ஏங்க, வெறும் விபூதி மட்டும் பூசாதீங்க, நடுவில் கொஞ்சம் குங்குமம் வைங்க, அது உங்களுக்கு நல்லா  இருக்கும், இருங்க நா வைச்சி விடறேன்”, என்று கூறி மிகவும் கவனத்தோடு குங்குமப் பொட்டு  வைப்பாள் வத்சலா.” இப்ப பாருங்க எப்படி ஜம்முன்னு இருக்கு”, என்று அவளே அழகு பார்ப்பாள்.

            ஆனால் கோவிந்தராஜன் சற்று விறைப்பா, “சரி, சரி போதும் நீ அழகு பார்த்தது”, என்று சொல்லியப்படி, மனதுக்குள் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்று விடுவார்.

            “ம்ஹ்ம், அவள் இருக்கும் போதே அன்பை வெளி காட்டியிருக்க வேண்டும், ரொம்ப விரைப்பா, திமிரா இருந்தேன், இப்ப பேசக் கூட ஆளில்லை “, என்று வழிந்த கண்ணீரை அவசர அவசரமாக துடைத்து கண்களை திறந்தார்.

             அவருடைய மனைவி வத்சலா தவறி மூன்று மாதமாகிறது. இருந்த ஒரே பெண்ணையும் மும்பையில் கட்டி கொடுத்து இரண்டு வருடமாகிறது. தனிமை அவரை கொன்றது. Retirement ஆகி வீட்டில் இருக்கும் போது கெத்து குறையக் கூடாது என்று நினைத்து, காலையில் எழுந்து அலுவலகம் செல்வது போல் குளித்து, கிளம்பி பனியன், வேஷ்டியுடன் கண்ணாடி, படிக்க புத்தகம்,டைரி எழுத பேனா சகிதம் வீட்டு முகப்பில் வந்து அமர்ந்துக் கொள்வார்.

             தலையை மட்டும் திருப்பி ,”வத்சலா காபி “, என்பார். காபி வரும்,, அதை ருசித்தப்படி, “ம்ம், நீயும் 27 வருஷமா காபி போடற, ஆனா ஒரு தடவ கூட நல்லாயில்லை”,  என்ற வசனத்தை சொல்லி ரசித்து, ருசித்து காபி குடிப்பார். பழகிவிட்டது வத்சலாவுக்கு, பதில் ஏதும் கூறாமல், உள்ளே சென்று விடுவாள்.

             சரியாக ஒன்பது மணிக்கு , உணவு மேசைக்கு வந்து உட்காருவார், சூடாக இட்லி அல்லது உப்புமா வரும், மறக்காமல் குறை சொல்லி ரசித்து உண்பார், மூன்று வேலையும் இது தொடரும். இப்படியே கணைப்பிற்கும், “ஏய் ! வத்சலா”, என்ற குரலோடு வேண்டியதை சாதித்து வந்தார். ஆனால் இப்போது தனியாக வீட்டில் உலா வருகிறார். யாரையும் பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்து வந்தார். யாரை கண்டாலும் எரிந்து விழுந்தார். அமைதியாக பழைய நினைவுகளோடு வாழ பழகி வருகிறார். சில சமயம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகையில், cylinder, பால், காய்கறி, என்று யாராவது வந்து திட்டத்தை நிறுத்திவிடுவார்கள்.

             காலையில் பேப்பர் தூக்கி போடுகிறான் என்று, அவனிடம் சண்டை.இம்முறை விடுவதாக இல்லை, என்று எண்ணி இடுப்பில் கை வைத்து கேட் அருகே நின்றிருந்தார். பேப்பர் போடும் பையன் வந்துக் கொண்டிருந்தான். இவரைப் பார்த்ததும் பார்க்காதது போல் கேட் கம்பியில் சொருகி விட்டு நகர்ந்தான். ‘அப்ப ஆள் இருந்தா  தூக்கி எறியமாட்ட அப்படிதான”, என்றார், அவன் அசடு வழிந்தப் படி சென்றான்.

             அவன் வருகையில் ஒரு நாயும் கூடவே வரும், இம்முறை அதனோடு ஒரு குட்டி வந்தது. என்ன நினைத்ததோ அந்த குட்டி ,இவர் வீட்டு கேட் க்குள் வர முயற்சித்தது. அதை  பார்த்த மாத்திரத்தில் ,”ஏய்! என்ன புதுசா, போ போ!” என்றார். அது பயந்து கேட் அருகே நின்று வாலை  ஆட்டியது.

              பேப்பர் எடுத்து உள்ளே செல்கையில், முதலில் வேலை செய்த வேலைக்காரி, பக்கத்து வீட்டிலுருந்து,” சார், ஏதாவது வேலை செய்யணுமா, வரட்டுமா சார்,” என்றாள். கீழே குனிந்தப்படி,”வேண்டாம்,வேண்டாம் நன் பார்த்துகிறேன்”, என்று விருட்டென்று உள்ளே சென்றார். “ம்ஹ்ம்! இந்த வீராப்புக்கு மட்டும் குறைச்சல் இல்ல “, என்று முனுமுனுத்தப்படி அவளது வேலையில் கவனம் செலுத்தினாள்.

             மறுநாள், “பேப்பர் பையன் யாரும்  இல்லாத போது, எப்படி போடுகிறான் என்று பார்ப்போம்,” என்று ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தார் கோவிந்தராஜன். இவர் வீட்டருகே வந்தவன் சைக்கிளில் சாய்ந்தப்படி பேப்பரை கேட்டில் சொருகினான். உடனே வெளியே வந்து,” குட்  பாய்”, என்று அவனைப் பார்த்து புன்னைகைத்தார். பதிலுக்கு அவன் புன்னகையோடு,”Thank You sir”, என்றான். “ம்ம்  ஆங்கிலம் தெரியுமா என்றார். “சார், நான் 12 th முடிச்சு, கல்லூரிக்கு போறேன் சார், இது என் part Time Job .வத்சலா அம்மா இருந்தப்ப 12th எக்ஸாம் பீஸ் தந்து வாழ்த்து சொன்னாங்க சார். அம்மாவோட சிரிப்பு வந்து  வந்து போகுது சார், தங்கமானவங்க சார்”, என்று நீர் கோர்த்த கண்களோடு சென்றான்.

             “வத்சலா , படிக்க உதவி செய்திருக்கிறாளா?”, என்று, நினைத்தப்படி இருக்கையில். பால்காரர் வந்து, “என்ன சார் இன்னைக்கு எனக்காக காத்திருக்கீங்களா , மன்னித்து விடுங்கள் சார் இன்னைக்கு லேட்  ஆயிட்டு,” என்று பால் கவரை கையில் கொடுத்தார். போகையில்,”அம்மாவும் இப்படிதான் உங்களுக்கு காபி போட லேட்  ஆயிட்டா கேட் அருகே நிற்பாங்க, மவராசி என் பொண்ணு கல்யாணத்துக்கு புடவை எடுத்துக் கொடுத்தாங்க சார்”, கடைல எதாவது வாங்கணும்னா சொல்லுங்க சார் , வாங்கி வரேன்”, என்று கூறியப்படி நகர்ந்தான்.

            அப்படியே யோசித்தவண்ணம் திரும்புகையில், “சார், தப்பா எடுத்துக்காதீங்க சார், அம்மா இருந்த போது எனக்கு  நிறைய உதவி செய்தாங்க சார், அந்த நன்றிக் கடனை தீர்க்கவாவது வாரம் ஒரு முறை வீட்டை சுத்தி கூட்டி, வீடு துடைத்துவிட்டு போறேன் சார் “, என்று கெஞ்சினாள் பழைய வேலைக்காரி. கேட்ட கோவிந்தராஜன் மறுக்க மனமில்லாமல், ‘சரி, சரி, நாளைக்கு வா”, என்றார்.

             ஏதோ முனகல் சத்தம் கேட்க, திரும்பியவர், வாலை  ஆட்டிக்கொண்டு நின்றிருந்த அந்த நாய் குட்டியை பார்த்ததும், சிரித்தப்படி ,”நீயும் வா”, என்று கூறி சாய்வு நாற்காலியில் அமர்ந்த அவர் , தனக்கு தெரியாமல் வத்சலா செய்த புண்ணியங்கள் இன்று அவருக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது, என்று நினைத்து வழிந்த கண்ணீரை துடைத்தப்படி காபி போட சென்றார் , நாய்க் குட்டியுடன்.       

  

 

Comments

Popular posts from this blog

அன்புள்ள அப்பாவுக்கு,

  அன்புள்ள அப்பாவுக்கு,               உங்க ஆச மவ பாக்கியம் எழுதுறேன். நா இங்க சுகமா இல்லப்பா. நம்ம ஒத்த புள்ளைய நல்ல இடத்துல கட்டிக்கொடுத்துட்டோம்னு சந்தோஷத்துல இருப்பீங்கன்னு தெரியும். ஆனா நா இதுவரைக்கும் உங்ககிட்டையும், அம்மாட்டயும் சொல்லாத விஷயத்த இப்போ சொல்றேன்.                           எம்மவ பாக்கியம்   கிடைக்க நா பாக்கியம்   பண்ணியிருக்கேன்னு, ஒரு நாளைக்கு நூறு தடவையாச்சம் சொல்வீங்க. இங்க புகுந்த வீட்டுல உங்க பாக்கியம்   பாடாப்படுது.                   நாலு ஆம்பளை புள்ளைங்களுக்கு பிறகு, பிறந்த என்ன, பாராட்டி சீராட்டி வளத்து, படிக்கப் போனா பயலுவ பாப்பாங்க, வயலுக்கு போனா வாடிடுவேன்னு , பொத்தி வைச்சு வளத்து, என்னத்த கண்டீங்க, போங்க முடிஞ்சத சொல்லி என்ன லாபம்.                            தரகர் கொண்டு வந்த வரன்ல, இவன் குடிகாரன், இவுங்க கூட்டு குடும்பம், இவுங்கள பத்தி அப்படி சொல்லிக்கிற மாதிரி இல்ல, இது சரியாவராது, அந்த பையன் சரிஇல்ல, இவன் மாறு கண்ணு, இவன் வழுக்க, இவனுக்கு வயசு அதிகம்யா, என்று வந்த வரன்னை எல்லாம் ஒதுக்கியப்போ நினைச்சேன், அப்பா நம்பள நல்ல இடத்துல தான் கட்டி கொடுக

தொடர்வண்டி பயணம்

       தொடர்வண்டி பயணம் தொடர்வண்டி , ஒரு அருமையான பயண ஊர்தி. களைப்பில்லாமல் களிப்போடு பயணிக்கலாம். அதுவும் ஜன்னலோரப் பயணம்- ஆஹா அற்புதம். முன்பதிவு செய்ததால், சற்றும் பதட்டமில்லாமல், எனக்கான ஜன்னலோரம் இருக்கையில் அமர்ந்தேன், அதுவே பெரிய சாதித்த உணர்வை தந்தது. ரயில் நிலைய சலசலப்பு சற்று எரிச்சலடைய வைத்தது. அறிவிப்புகள் வந்த வண்ணம்   இருந்தது. நான் ஏறியதால் , அந்த அறிவிப்பும் அவசியமற்றதாக தோன்றியது. இந்த ரயில் தான் இந்த நிலையத்திற்கே கடைசி போல சிறு வியாபாரிகள் அவசர அவசரமாக தங்கள் பொருட்களை விற்பதில் தீவிரம் காட்ட, தேவையான தின்பண்டங்கள், உணவு, மற்றும் நீர் இருப்பதை என் பையைத் தொட்டு உறுதி படுத்திக் கொண்டு, ரயில் நகர்ந்து வேகமெடுக்க ஆவலாக இருந்தேன். வீட்டிலும், வரும் வழியிலும், ரயிலுக்கு காத்திருப்பிலும் சொல்ல நேரமில்லாத விஷயங்களை, அவசர அவசரமாக ஜன்னலோரமாக நின்றுக் கொண்டு, பயணம் செய்யப்போகும் , தன் மனைவியிடம் அவளது கணவன்   அளவளாவிக்   கொண்டிருந்தார். எனக்கு சிரிப்பு வந்தது, வீட்டில் இருக்கும் போது முகம் கொடுத்து கூட பேச மாட்டார்கள், இப்போது பார்க்கும் போது ஆத்மார்த்த தம்பதி போல் பா வன

SMART BOY SALEEM

                               SMART BOY SALEEM                                                 நான் தற்போது உங்களிடம் பதியும் பதிவு, நான் முதல்வராக இருந்த தருவாயில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு.                     சலீம் ஒரு LKG மாணவன். அவர்கள் வீட்டின் ஒரே செல்லப் பிள்ளை அவனது தந்தை துபாயில் பணிபுரிகிறார். சலீமை LKG சேர்பதற்கு மேள தாளம் மட்டும் இல்லை. அவர்கள் மொத்த குடும்பமும் , அவர்கள் ஏரியா மசூதி தலைவருடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.                    ஒரு பெரிய தாம்பாளத்தில் பழ வகைகளோடு என் அறைக்குள் வந்தனர். அவர்கள் குடும்பத்தில் அவ்வளவாக படித்தவர்கள் இல்லை போலும், அதனால் தான் சலீமுக்கு இந்த ஆர்ப்பாட்டம். சரி சேரப் போகும் மாணவன் எங்கே என்று கேட்டேன்,”மேடம் அவன் உள்ள வராம அவுங்க அம்மாவோடு கேட் அருகே அழுதுட்டு நிக்கறான்”, என்றார் அப்பையனின் தந்தை.                    எங்கள் பள்ளியில் LKG அட்மிஷன் போடும் மாணவர்களுக்கு ஒரு பரிசுப் பொருள் கொடுப்பது வழக்கம். அதனால் அந்த வருடம் வழங்க உள்ள ஜீப்பை எடுத்துக் கொண்டு நானே கேட் அருகே சென்றேன். அங்கு பெரும் சத்தத்தில் சலீம் அழுதுக் கொண்டி